Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

‘1033’ உதவி எண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த திட்டம்

‘1033’ உதவி எண்ணை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த திட்டம்

தேசிய நெடுஞ்சாலைகளில் அவசரகால உதவிக்காக செயல்பட்டு வரும் ‘1033’ உதவி எண்ணை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விபத்து நடந்த இடத்திற்கு 30 வினாடிகளுக்குள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தியாவின் மொத்த சாலை வலையமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் 2.3 சதவீதம் மட்டுமே உள்ளன. இருப்பினும், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 36 சதவீதத்துக்கும் அதிகமானவை தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்கின்றன. விபத்து நடந்த முதல் 60 நிமிடங்கள் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியமானதாக கருதப்படும் நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ‘1033’ உதவி எண் முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 1.46 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவைக்கு தினமும் சராசரியாக 15 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு விரைவான சேவையை வழங்கும் வகையில், ‘1033’ எண்ணை ஏ.ஐ., நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நவீன அவசரகால பதில் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அமைப்பு மூலம் உதவி எண்ணை தொடர்புகொள்பவர்களின் இருப்பிடத்தை உடனடியாகவும் துல்லியமாகவும் கண்டறிய முடியும்.

Advertisement
மேலும், பல்வேறு இந்திய மொழிகளில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளையும் புரிந்துகொண்டு, விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸ், கிரேன் அல்லது ரோந்து வாகனங்களை 30 வினாடிகளுக்குள் அனுப்ப உதவும். இதனுடன், சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை நிலவரங்களையும் நிகழ்நேரத்தில் கண்காணித்து, அவசரகால வாகனங்கள் விரைவாக சென்றடையக்கூடிய பாதையில் அவற்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துகள் தொடர்பான அவசர உதவிகள் மட்டுமின்றி, சுங்கச்சாவடி, பாஸ்டேக், சாலை நிலவரம் குறித்த புகார்கள் போன்ற அவசரமற்ற கோரிக்கைகளையும் மேம்படுத்தப்பட்ட உதவி எண் மூலம் கையாள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குரல் அழைப்பு, எஸ்.எம்.எஸ்., வாட்ஸ்அப் மற்றும் செல்போன் செயலி உள்ளிட்ட வழிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், புதிய அமைப்பு அவசரகால உதவி எண் 112 மற்றும் ‘ராஜ்மார்க் யாத்ரா’ செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டாலும், மனித தலையீடு அவசியமாகும் சூழல்களில் ஆபரேட்டர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு