ஹிஜாப் அணிய அனுமதி கோரிய முஸ்லிம் மாணவியின் மனு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் செயல்பட்டு வரும் தாகூர் பப்ளிக் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர சுகைனா ரிஸ்வி என்ற முஸ்லிம் மாணவி விண்ணப்பித்திருந்தார். பள்ளி சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் இந்திரஜித் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.பள்ளிகளில் சீருடை விதிகள் மாணவர்களின் ஒழுக்கத்தை பராமரிப்பதோடு, அந்த கல்வி நிறுவனத்தின் தனித்துவமான அடையாளத்தையும் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சீருடை தொடர்பான விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் பள்ளி நிர்வாகத்துக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.தனிப்பட்ட விருப்பம் அல்லது மத நம்பிக்கையை காரணமாகக் கொண்டு, பள்ளியின் சீருடை விதிகளில் இருந்து தனிப்பட்ட விலக்கு கோர முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
மனுதாரர் 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்த காலத்தில் ஹிஜாப் அணிவதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக, பிளஸ்-1 வகுப்பிலும் அதே நடைமுறையைத் தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.சீருடை நடைமுறை மாணவர்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதுடன், சாதி மற்றும் மத வேறுபாடுகளை தவிர்த்து மதச்சார்பற்ற கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் தவிர்க்க முடியாத கட்டாய நடைமுறை என்பதற்கோ, அதை அணியாமல் இருப்பதால் மத நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கோ போதுமான ஆதாரங்களை மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர்.
இதன் அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அவர்கள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கின் விசாரணையின்போது, 2022-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதிகள் மேற்கோள் காட்டினர். அந்த தீர்ப்பில், ஹிஜாப் அணிவது முஸ்லிம் மதத்தில் கட்டாயமான மத நடைமுறை அல்ல என்று குறிப்பிடப்பட்டிருந்தது.