தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடனை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.இந்நிலையில், விவசாயிகள் தங்களது நிலங்களில் மேற்கொள்ளும் வேளாண் சார்ந்த மேம்பாட்டுப் பணிகளுக்காக புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மோட்டார் பம்ப் அமைத்தல், குறைந்த திறன் கொண்ட மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைத்தல், நிலத்தை மேம்படுத்துதல், அறுவடை கருவிகள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடனுக்கு 9 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
புதிய திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ரூ.5,000 கோடி வரை கடன் வழங்க கூட்டுறவுத் துறை திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வேளாண் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அறுவடை கருவிகள் வாங்குவதற்காக விவசாயிகள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் பெறும் நிலை இருப்பதாகவும், பின்னர் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தகவல் கிடைத்தது.இதனை கருத்தில் கொண்டு, வேளாண் சார்ந்த தேவைகளுக்காக விவசாயிகள் தலா ரூ.5 லட்சம் வரை 9 சதவீத வட்டியில் கடன் பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவையுள்ள விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகள் அல்லது கூட்டுறவு சங்கங்களை அணுகி கடன் பெற்றுக்கொள்ளலாம்.