கோவாவுக்கு சுற்றுலா சென்ற பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்கு வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த அறிமுகமில்லாத நபருக்கு உணவு மற்றும் நிதியுதவி செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த நிஸ்சிதா நரேன் அண்மையில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர் ஒருவரிடம் அவர் பேசியுள்ளார். அந்த உரையாடலின்போது, அந்த நபரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமான சூழல் நிஸ்சிதாவுக்கு தெரியவந்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த அந்த நபர், கோவாவில் சுயதொழில் தொடங்கும் எண்ணத்துடன் வந்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக தொழிலில் முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்து பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதனால் வேலை இல்லாமல் அங்கு தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது நிலையை நினைத்து கண்ணீர் மல்க நிஸ்சிதாவிடம் பேசிய அவர், வாழ்க்கை சில நேரங்களில் அனைவருக்கும் கடினமானதாக மாறிவிடும் என உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தனது கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நிஸ்சிதா கோவா பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும், தன்னை மட்டும் மறந்துவிடக் கூடாது என்றும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Advertisement
அவரது சூழ்நிலையையும், இக்கட்டான நிலையிலும் அவர் வெளிப்படுத்திய பக்குவத்தையும் கண்டு நெகிழ்ந்த நிஸ்சிதா, அவருக்கு உடனடியாக உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அவர் மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல ரெயில் டிக்கெட் எடுப்பதற்கான நிதியுதவியையும் வழங்கியுள்ளார். இந்த மனிதநேய சந்திப்பை நிஸ்சிதா வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பயணங்கள் எப்போதும் கடற்கரைகளை ரசிப்பதற்காக மட்டுமே அமையாது என்றும், சில நேரங்களில் நமது பாதையில் கடவுள் அனுப்பும் மனிதர்களை சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், நிஸ்சிதாவின் மனிதாபிமான செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.