2026-ம் ஆண்டுக்கான வேதியியல் துறை நோபல் பரிசு பிரான்ஸ் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளிலும், அமைதிக்காக பாடுபடுபவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்று முன்தினம் தொடங்கின. மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று வெளியிட்டது.
Advertisement
பிரான்ஸ் விஞ்ஞானி ஹென்றி பி. காகன் மற்றும் ஜப்பான் விஞ்ஞானி கென்சோ சோய் ஆகியோர் இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். சமச்சீரற்ற கரிமத் தொகுப்பு தொடர்பான ஆய்வுகளில் நேரியல் அல்லாத விளைவுகள் மற்றும் தன்வினையூக்கத்தை கண்டறிந்ததற்காக இருவருக்கும் இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகை 1 கோடியே 20 லட்சம் சுவீடன் பணமாகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.55 கோடியாகும். நோபல் பரிசுகள் வரும் டிசம்பர் மாதம் வழங்கப்பட உள்ளன. நாளை இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 9-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 12-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன.