இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அவர், தொடர்ந்து ஏற்பட்ட காயங்கள், குறிப்பாக முழங்கால் பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மார்க் வுட், 11 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவங்களிலும் சேர்த்து 146 சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார். மார்க்வுட்டின் சர்வதேச சாதனைகள்: டெஸ்ட்: 38 போட்டிகள் – 119 விக்கெட்டுகள் ஒருநாள்: 70 போட்டிகள் – 80 விக்கெட்டுகள் டி20: 38 போட்டிகள் – 54 விக்கெட்டுகள் மொத்தம்: 146போட்டிகள்- 253விக்கெட்டுகள் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் பங்கு இங்கிலாந்து அணி வென்ற இரண்டு முக்கியமான உலகக் கோப்பைகளிலும் மார்க் வுட் இடம்பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றபோது, வுட் 18 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்தத் தொடரில் பல சந்தர்ப்பங்களில் மணிக்கு 150 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையிலும் இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. அந்தத் தொடரில் 4 போட்டிகளில் விளையாடிய வுட் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும், காயம் காரணமாக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆஷஸ் தொடரிலும் மறக்க முடியாத பங்களிப்பு மார்க் வுட்டின் சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ஆஷஸ் தொடருக்கும் முக்கியத்துவம் உண்டு. 2015-ம் ஆண்டு தனது முதல் ஆஷஸ் தொடரிலேயே நாட்டிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஆஷஸ் வெற்றியை உறுதி செய்த விக்கெட்டை அவர் வீழ்த்தினார். 2023-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஹெடிங்லியில் வுட் வெளிப்படுத்திய அதிரடி பந்துவீச்சு இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. அந்தத் தொடரில் 2-0 என பின்தங்கியிருந்த இங்கிலாந்து, இறுதியில் 2-2 என தொடரை சமன் செய்ய அவரது பந்துவீச்சும் உதவியது. காயங்களால் தொடர்ந்த பின்னடைவு மார்க் வுட்டின் கிரிக்கெட் வாழ்க்கையில் காயங்கள் தொடர்ந்து சவாலாக இருந்தன. கணுக்கால், முழங்கை, தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் காயங்களை சந்தித்துள்ளார். குறிப்பாக இடது முழங்கால் காயம் அவரது சர்வதேச பயணத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
Advertisement
2025-ம் ஆண்டு முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2025-26 ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் களமிறங்கினார். ஆனால் அந்தப் போட்டியில் 11 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், மீண்டும் அதே முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அதன்பிறகு இங்கிலாந்து அணிக்காக அவர் எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. கனவுக்கு முற்றுப்புள்ளி காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் இங்கிலாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக மார்க் வுட் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் இனி டெஸ்ட் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியாது என்பது தெரியவந்ததால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். கடந்த ஓராண்டாக மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து விளையாட வேண்டும் என்ற தனது கனவு படிப்படியாக தன்னைவிட்டு விலகியதாகவும் வுட் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்காக விளையாடியது மிகப்பெரிய கவுரவம் ஓய்வு குறித்து மார்க் வுட் கூறுகையில், இங்கிலாந்து அணிக்காக விளையாடியதை தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியதை அதிர்ஷ்டமாக நினைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கிலாந்து ஆண்கள் அணியின் நிர்வாக இயக்குநர் ராப் கீயும் மார்க் வுட்டின் பங்களிப்பை பாராட்டியுள்ளார். ஆஷஸ் வெற்றிகளிலும், இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளிலும் அவர் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்துள்ள ராப் கீ, பந்தை கையில் எடுத்தாலே ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக வுட் இருந்ததாக கூறியுள்ளார். 2025 நவம்பரில் பெர்த்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியே இங்கிலாந்துக்காக மார்க் வுட் விளையாடிய கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. அந்த ஆட்டத்துக்குப் பிறகு ஏற்பட்ட முழங்கால் பிரச்சினை, அவரது சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 146 சர்வதேச போட்டிகள், 253 விக்கெட்டுகள், இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் பங்கு, ஆஷஸ் தொடரில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என நீண்ட பயணத்தை கொண்ட மார்க் வுட், இங்கிலாந்தின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுள்ளார்.