விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷ்ணு விஷால், தொடர்ந்து ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’, ‘ஆர்யன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement
இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெள்ளிச்சுடரே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 23-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.