சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 62-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (19). ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவரது அண்ணன் சிலம்பரசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகப் பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையான கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சூர்யா மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சிலம்பரசனைத் தேடி வந்துள்ளது. அவரைக் கொலை செய்யும் நோக்கில் அந்தக் கும்பல் தாக்க முயன்றபோது, சிலம்பரசன் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, தனது அண்ணனைத் தாக்க வந்தவர்களை தனுஷ் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், தனுஷை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. படுகாயமடைந்த தனுஷ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.கே.பி. நகர் போலீசார், தனுஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய பொய்யாது, அப்புகுட்டி, சூர்யா, பாட்ஷா ஆகிய 4 பேரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய போலீசார் தொடர்ந்து தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.