சென்னை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீண்டகாலமாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. நீர்நிலைகள், குறிப்பாக கடல், ஆறுகள் மற்றும் குளங்கள், மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. அவற்றை மாசுபடாமல் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இதன்மூலம் நீர்நிலைகளின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: 1. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக், தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் கலக்காத சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பாக கரைக்க அனுமதி உள்ளது. 2. சிலைகளின் ஆபரணங்களை அலங்கரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு பளபளப்பை ஏற்படுத்த மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை பிசின்களையும் பயன்படுத்தலாம். 3. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
Advertisement
சிலைகள் மற்றும் பந்தல்களின் தயாரிப்பு அல்லது அலங்காரத்துக்கு வைக்கோல் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 4. சிலைகளுக்கு நச்சுத்தன்மை கொண்ட அல்லது மக்காத ரசாயன சாயங்கள் மற்றும் எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை அடிப்படையாகக் கொண்ட வண்ணப்பூச்சுகளுக்கும் அனுமதி இல்லை. அதற்கு பதிலாக நீர் சார்ந்த, மக்கும் தன்மை கொண்ட, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 5. சிலைகளை அலங்கரிக்கும்போது வண்ணப்பூச்சுகள் மற்றும் நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களை தவிர்த்து, இயற்கைப் பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் தயாரிக்கப்பட்ட அலங்கார ஆடைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கரைக்க வேண்டும்.சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.விநாயகர் சதுர்த்தி என்பது ஆன்மிகக் கொண்டாட்டமாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலின் தூய்மை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் நமது பொறுப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அமைய வேண்டும். எனவே, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.