விண்வெளி கழிவுகளை கண்காணிக்க புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா
பூமியில் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவது போலவே, விண்வெளியில் தேங்கும் கழிவுகளும் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. அதனால் அவற்றை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது, ஒரு சென்டிமீட்டருக்கு மேற்பட்ட அளவுடைய மனிதனால் உருவாக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான விண்வெளி கழிவுகள் அதிவேகத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன.இந்த விண்வெளி கழிவுகள் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்கலன்களுடன் மோதி சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதுடன், விண்வெளிப் போக்குவரத்தையும் பாதிக்கக்கூடும். ஆனால் பரந்து விரிந்த விண்வெளியில் அவற்றை இடையறாது கண்காணிப்பது சவாலான பணியாக உள்ளது.
இதற்காக, 24 மணி நேரமும் விண்வெளி கழிவுகளை கண்காணிக்கும் நோக்கில், சீனா தனது முதல் 'கண்டே' (Gande) வணிக செயற்கைக்கோள் கூட்டமைப்பை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட மொத்தம் 120 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் முதல் செயற்கைக்கோள் கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு சீனாவில் இருந்து 'லிஜியன்-1' ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தத் திட்டம் 2030-ஆம் ஆண்டுக்குள் மூன்று கட்டங்களாக முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.