சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி இன்று காலை முதலே கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதலே காத்திருந்த சுற்றுலா பயணிகள், அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.
Advertisement
இதையடுத்து, முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் புனித நீராடி வருகின்றனர். மேலும், படகுத்துறையில் இருந்து படகுகளில் கடலுக்குள் சென்று, நடுக்கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டு வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா பகுதிகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.