Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 29 செப்டம்பர் 2026 | 13 புரட்டாசி பராபவ வருடம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வாடகை கார் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்துக்காக ஓட்டுநரை கொலை செய்து, அவரது உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசியதுடன், காரையும் எடுத்துச் சென்று விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (50), வாடகை கார் ஓட்டி வந்தார். கடந்த 23-ந்தேதி சவாரி செல்வதாகக் கூறி காரில் புறப்பட்ட அவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், கடந்த 26-ந்தேதி பவானிசாகர் இரும்புப் பாலம் அருகே கீழ்பவானி வாய்க்கால் தேக்க நீரில் ஆண் ஒருவரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அது காணாமல் போன ஜெயச்சந்திரனின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. ஜெயச்சந்திரனின் கார் அங்கு இல்லாததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்தை இறுக்கி அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பவானிசாகர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதற்கிடையே, நேற்று (28-ந்தேதி) தொப்பம்பாளையம் நான்கு ரோடு பகுதியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

Advertisement
தீவிர விசாரணையில், ஜெயச்சந்திரனை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த எஸ். தன்ராஜ் (40), திண்டுக்கல்லைச் சேர்ந்த பி. பாலமுருகன் (52), திருப்பூரைச் சேர்ந்த எஸ். ஆனந்தன் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், முதலில் கோயில் ஒன்றில் புகுந்து உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்க மூவரும் திட்டமிட்டதாகவும், ஆனால் உண்டியலில் பணம் இல்லாததால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணம் தேவைப்பட்டதால், உசிலம்பட்டியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு சத்தியமங்கலம் செல்ல கார் தேவை எனக் கூறி ஜெயச்சந்திரனின் காரை வாடகைக்கு எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஈரோடு முடுக்கண்துறை மார்க்கெட் அருகே கார் சென்றபோது, காருக்குள்ளேயே துணியால் ஜெயச்சந்திரனின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை கீழ்பவானி வாய்க்காலில் வீசியதாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து காரை எடுத்துச் சென்று விற்று, கிடைத்த பணத்தை மூவரும் பங்கிட்டுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். மேலும், கடத்திச் செல்லப்பட்ட காரை மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு