வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் என்னென்ன?
தமிழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் விவசாயம், தோட்டக்கலை, நீர் மேலாண்மை, உயிர்ம வேளாண்மை, தொழில்நுட்பம், விவசாயிகளுக்கான ஊக்கத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற்றன. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, சட்டப்பேரவை வளாகத்தில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்து பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். அதேவேளையில், வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். பட்ஜெட் உரையை தொடங்கிய அமைச்சர் வினோத், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் தொடர்வதுடன் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், வேளாண்மை வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.இதற்கிடையில், முதல்-அமைச்சரை பாராட்டிய சில பகுதிகளை அமைச்சர் வாசித்தபோது எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, வேளாண் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை மட்டுமே வாசிக்குமாறு அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்: * தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்த ரூ.122.51 கோடி ஒதுக்கீடு. * நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி. * ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் வழங்கும் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி அறிமுகம்; ரூ.2 கோடி ஒதுக்கீடு. * உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை. * இலவச மின்சார திட்டத்திற்காக ரூ.7,432 கோடி நிதி. * உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டைகள் வழங்கப்படும். * மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.36 கோடி. * காட்டுப்பன்றி சேதத் தடுப்பு திட்டத்திற்கு ரூ.7.35 கோடி. * தொழில்நுட்பம் மற்றும் பாரம்பரியத்தை இணைக்கும் வேளாண் கண்காட்சிக்கு ரூ.3 கோடி. * விளைபொருட்களை மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்க 43,500 தார்பாய்கள் வழங்க ரூ.10 கோடி. * சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்ட சிறுதானிய சாகுபடியை இருமடங்காக உயர்த்த தமிழ்நாடு குறுதானிய இயக்கம்; ரூ.7.61 கோடி. * கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.9 கோடி. * மூன்று புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ரூ.7.1 கோடி. * சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்க ரூ.11 லட்சம். * தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்த ரூ.1.20 கோடி. * மாடித்தோட்டம், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.10 கோடி. * வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டத்திற்கு ரூ.10 கோடி.