தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'இம்ப்ரூவ்ட் ரைஸ்' (Improved Rice) எனப்படும் மேம்படுத்தப்பட்ட அரிசியை விநியோகிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒதுக்கப்படும் அரிசியை, குடும்ப அட்டைதாரர்கள் தங்களது தேவைக்கேற்ப பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிசி மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் மூலம் மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்திய உணவுக் கழகத்தின் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்தப் பணியை மேற்கொள்கிறது. கொள்முதல் செய்யப்படும் நெல், அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளில் அரைக்கப்பட்டு பச்சரிசி, புழுங்கல் அரிசியாக மாற்றப்படுகிறது. பின்னர், மத்திய அரசின் உணவு தானிய ஒதுக்கீட்டில் இந்த அரிசி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
Advertisement
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க மாதந்தோறும் சுமார் 3.30 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. தற்போது வழங்கப்படும் புழுங்கல் அரிசியில் 16 சதவீதம் வரையும், பச்சரிசியில் 25 சதவீதம் வரையும் உடைந்த அரிசி இருக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ரேஷன் அரிசியின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, மேம்படுத்தப்பட்ட அரிசியான 'இம்ப்ரூவ்ட் ரைஸ்' விநியோகிக்கப்படும். இந்த அரிசியில் புழுங்கல் அரிசிக்கு உடைந்த அரிசியின் அளவு அதிகபட்சம் 5 சதவீதமாகவும், பச்சரிசிக்கு 10 சதவீதமாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை அரிசி ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது சோதனை அடிப்படையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அடுத்த ஆண்டு முதல் மேம்படுத்தப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.