ரூ.525.75 கோடியில் கட்டப்பட்ட 4,260 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு; பெரம்பூரில் நவீன பேருந்து நிறுத்தமும் பயன்பாட்டுக்கு வந்தது
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.525.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், சென்னை வளர்ச்சி குழுமம் பெரம்பூரில் ரூ.1.43 கோடி செலவில் அமைத்துள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தையும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பல்வேறு மாவட்டங்களில் அமைத்துள்ள புதிய குடியிருப்புகளையும், பெரம்பூரில் உருவாக்கப்பட்டுள்ள நவீன பேருந்து நிறுத்தத்தையும் முதல்-அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். 9 திட்டப்பகுதிகளில் 4,260 குடியிருப்புகள் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தின் காந்தி நகர் மறுகட்டுமான திட்டப்பகுதியில் ரூ.85.55 கோடி செலவில் 500 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம் பூச்சி அத்திப்பேடு பகுதியில் ரூ.156.14 கோடியில் 1,152 குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம் மோதூரில் ரூ.45.46 கோடியில் 516 குடியிருப்புகள் மற்றும் ஒடையாக்கவுண்டன்பாளையத்தில் ரூ.40.52 கோடியில் 384 குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை நல்லம்பள்ளி திட்டப்பகுதியில் ரூ.57.67 கோடி செலவில் 528 குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் ரூ.60.19 கோடியில் 528 குடியிருப்புகள், தேனி மாவட்டம் உத்தமபுரத்தில் ரூ.39.14 கோடியில் 336 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.மேலும், நீலகிரி மாவட்டம் நடுஹட்டியில் ரூ.22.16 கோடியில் 164 குடியிருப்புகளும், சேரங்கோட்டில் ரூ.18.92 கோடி செலவில் 152 குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.மொத்தம் ஒன்பது திட்டப்பகுதிகளில் ரூ.525.75 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.