நாமக்கல் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் திடீரென ரூ.1,000-ல் இருந்து ரூ.9,160 ஆக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்வி நிறுவன வாகனங்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி போராட்டம் நடைபெற்றது. ராசாம்பாளையம் சுங்கச்சாவடி வழியாக தினமும் இயக்கப்படும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், வேன்களுக்கு இதுவரை மாதந்தோறும் ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சுங்கச்சாவடி நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணத்தை ரூ.9,160 ஆக உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த தனியார் கல்வி நிறுவன நிர்வாகத்தினர், இன்று (திங்கட்கிழமை) காலை தங்களது பேருந்துகளை சுங்கச்சாவடி கட்டண வசூல் மையங்களுக்கு முன்பு குறுக்காக நிறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுங்கச்சாவடி பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன.
Advertisement
பொதுமக்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் அவசர சிகிச்சை வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், போராட்ட வாகனங்களை சாலையோரமாக நிறுத்துமாறு அவர்கள் அறிவுறுத்தினர். இதனிடையே, கட்டண உயர்வு தொடர்பாக சுங்கச்சாவடி நிர்வாகம், தனியார் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் போலீசார் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின் முடிவை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.