நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஓ மைசா ரே’ வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகும் தெலுங்குத் திரைப்படமான ‘மைசா’வில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகும் இப்படத்தில், கோண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணாக அவர் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இதுவரை ஏற்று நடித்திராத வகையில் மிகவும் தீவிரமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா இப்படத்தில் தோன்றுகிறார். இந்த வேடத்திற்காக உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ராஷ்மிகா இடம்பெறும் நீருக்கடியில் நடைபெறும் சண்டைக்காட்சி இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்திய சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் நீருக்கடிச் சண்டைக் காட்சிகளில் இதுவும் ஒன்று என படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisement
இப்படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ கந்துகுரி, கார்த்திக் ரஞ்சினி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஷ்மிகாவின் இதுவரை பார்த்திராத ஆக்ரோஷமான தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘மைசா’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி 2026-ல் பான் இந்தியா திரைப்படமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் ராஷ்மிகா கையில் ரத்தக்கறை படிந்த ஈட்டியுடன் மிகவும் ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஓ மைசா ரே’ பாடல் தெலுங்கு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் ‘ரத்தவெறி கொண்டிருக்க..’ என்ற வரிகளுடன் இடம்பெறும் இப்பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். குமரா வக்தேவி பாடியுள்ள இந்தப் பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.