கோவையில் கனமழை பெய்ததாலும், கேரளாவின் திருச்சூரில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்ற தகவல் வெளியானதாலும், முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டது. கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரம்மாண்டமாகப் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வந்த அவருக்கு, அவினாசி சாலை வழியாக காந்திபுரம் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தப்பட்டது. அப்போது திறந்த வாகனத்தில் சென்றபடி பொதுமக்களைச் சந்தித்தார். தொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். விழா நிறைவடைந்ததும், பிற்பகல் 2 மணியளவில் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குச் செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார்.
Advertisement
அங்கு நடைபெறும் நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கோவையில் திடீரெனக் கனமழை பெய்யத் தொடங்கியதால் அவரது பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் ஹெலிகாப்டரை இயக்குவதிலும் சிக்கல் உருவானது. இதற்கிடையே, திருச்சூரிலும் பரவலாக மழை பெய்து வருவதுடன், பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பும் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் முதல்வர் விஜய்யின் பயணத்துக்கு உகந்த வானிலை நிலவுகிறதா என்பது குறித்தும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, வானிலை காரணமாக விஜய்யின் கேரள பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சென்னைக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதற்கிடையே, கனமழையிலும் தன்னைக் காண வந்திருந்த மக்களைச் சந்தித்த விஜய், குடை பிடித்தபடி திறந்த வேனில் நின்று கையசைத்தவாறு கோவை விமான நிலையத்துக்குச் சென்றார்.