தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது பிற மாநிலங்களிலும் தனது அமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. கேரளாவைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் கட்சியின் முதல் கிளை மற்றும் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் கிழக்கு பர்த்வான் மாவட்டம் பகுபூர் பகுதியில் தவெக புதிய கிளை அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். இணை ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விழாவில் பங்கேற்றனர். விழா மேடையில் தமிழக முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இது அங்கு திரண்டிருந்த கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Advertisement
அலுவலக திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய், மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதல்களைத் தவிர்த்து, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட சமூகப் பணிகள் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். முதலில் மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்திவிட்டு, அதன்பின்னர் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து முதல்-அமைச்சர் விஜய் எடுக்கும் முடிவின் அடிப்படையில் செயல்படுவோம் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே கேரளாவின் பாலக்காட்டில் தவெக அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வடஇந்திய மாநிலமான மேற்கு வங்காளத்திலும் கட்சி தனது கிளையை தொடங்கியுள்ளது. தவெகவின் இந்த மாநில விரிவாக்க நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்திலும், தேசிய அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.