மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் காக்காமல், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 13-11-2026 அன்று மைசூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றபோது, கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாது அணை தொடர்பாக மீண்டும் பேசியுள்ளார். கர்நாடகத்தில் மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளதாகவும், அணை கட்டும் முயற்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆறு என்பது வெறும் நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. தமிழர்களின் வரலாறு, உணர்வு மற்றும் வாழ்வாதாரத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது. குறிப்பாக, காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை இதனுடன் இணைந்துள்ளது. எனவே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடந்தகால அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, காவிரி நீர் உரிமை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், சட்டரீதியாகவே தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்பதே இதுவரை தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. ஆனால், தாங்கள் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு கர்நாடகத்துக்குச் சென்று அந்த மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியானபோதே, அத்தகைய முயற்சி வேண்டாம் என எச்சரித்தோம். தமிழக முதல்-அமைச்சரின் கர்நாடகப் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாத சூழலில், அமைச்சர்களும் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்ததால் விவசாயிகள் குழப்பமடைந்தனர். இதற்கிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், தமிழக அரசின் தரப்பிலிருந்துதான் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்ததாகவும், கர்நாடக அரசு அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
Advertisement
பின்னர் கர்நாடகத்தில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போதைய சூழலில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகத்துக்கு வர வேண்டாம் எனவும் கூறப்பட்டது. இத்தகைய நிகழ்வுகள் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளன. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டுடன் குரல் கொடுத்து வருகின்றன. அதேபோன்று, தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தேன். மேகதாது அணை கட்டும் பிரச்சினையை நடுவர் மன்றத்துக்கு அனுப்புவது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், சட்டமன்றத்தில் திமுக சார்பில் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மூலம் பிரதமரிடம் கொண்டு சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கர்நாடக துணை முதல்-அமைச்சர் மீண்டும் மேகதாது அணை கட்டுவது குறித்து உறுதியான கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. தமிழகத்தின் ஒற்றுமையையும், கர்நாடகத் தரப்பின் பேச்சுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். மேலும், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன், மேகதாது அணைக்கு எதிராக ஜூன் மாதம் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தையும் பிரதமரிடம் நேரில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தமிழகத்தில் உள்ள சட்டமன்றக் கட்சித் தலைவர்களும், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பிரதமரைச் சந்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் உரிமை சார்ந்த விவகாரத்தில் கட்சி வேறுபாடுகள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல், தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பது அவசியம். எனவே, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவார் என நம்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.