மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழக அரசுக்கு துணை நிற்போம்: காங்கிரஸ் தீர்மானம்
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்க தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்று உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி நீர் தொடர்பாக 2007-ம் ஆண்டு நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பும், 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலனை பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேகதாதுவில் ரூ.9,000 கோடி செலவில் 67.15 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டு வருவதாகவும், இதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் பாதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், தமிழக மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்துக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நலனுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, காவிரி நீருக்கான தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், மேகதாது அணை கட்டுவதை தடுக்கவும் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகள் குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் நரேந்திர மோடி அளித்த பல்வேறு வாக்குறுதிகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேற்றப்படவில்லை என்று பா.ஜ.க. அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.மோடி ஆட்சியில் ஏழை மற்றும் எளிய மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வருமானம் மற்றும் சொத்து பகிர்வில் ஏற்பட்டுள்ள சமத்துவமின்மை குறித்தும் காங்கிரஸ் தனது கவலையை பதிவு செய்துள்ளது.மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் அதிகரிக்கும் முயற்சி தென் மாநிலங்களின் உரிமைகளை பாதிக்கும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 543 மக்களவைத் தொகுதிகளையே தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு மாறாக, விவசாயிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியவில்லை என்றும், செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் வங்கிகளுக்கே திரும்ப வந்ததாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.