முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
தமிழக அரசியலில் முக்கிய தடம் பதித்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8-வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.1924 ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தின் திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். மேலும், சுமார் 40 ஆண்டுகள் தி.மு.க. தலைவராகவும், ஐந்து முறை தமிழக முதலமைச்சராகவும் பொறுப்பேற்று அரசியல் வாழ்வில் தனித்துவமான இடத்தைப் பெற்றார். அவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவரது 8-வது நினைவு நாளையொட்டி, தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி இன்று காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகில் இருந்து தொடங்கியது.