சென்னையில் நகை அடகு கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதாக சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் கைது செய்யப்பட்டார். முதல்முறையாக திருட்டில் ஈடுபட்ட அவர், ஆன்லைன் முதலீட்டில் ஏற்பட்ட பெரும் இழப்பு மற்றும் கடன் பிரச்சினை காரணமாக இந்த முயற்சியில் இறங்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூர் கெனால் சாலை பகுதியில் வசித்து வருபவர் 63 வயதான மங்கள்சந்த். இவர் இந்திராநகர் 17-வது குறுக்குத்தெருவில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 11-ந்தேதி மங்கள்சந்தின் கடைக்கு அருகில் வசிப்பவர்கள், மர்மநபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்துக் கொண்டிருப்பதாக செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக கடைக்கு விரைந்த மங்கள்சந்த், அக்கம்பக்கத்தினரின் உதவியையும் கேட்டார். பொதுமக்கள் அங்கு திரண்டதும், பூட்டை உடைத்துக் கொண்டிருந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து திருவான்மியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 25 வயதான ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு என்பது தெரியவந்தது.
Advertisement
சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததுடன், அப்பகுதியிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். நகை அடகு கடையில் திருட முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு அளித்த தகவல் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணினி நிறுவனத்தில் மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெற்று வந்ததாகவும், ஆன்லைன் முதலீட்டில் பெரும் தொகையை இழந்ததால் கடன் பிரச்சினையில் சிக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அந்தக் கடனை அடைப்பதற்காக திருட்டில் ஈடுபட முடிவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், இதுவே தனது முதல் திருட்டு முயற்சி என்பதால் போதிய அனுபவம் இல்லாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட ஸ்ரீராம் ஸ்ரீனு பாபுவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.