மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்களின் பயண வசதிக்காக சென்னை மற்றும் மதுரை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06153) புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு மதுரையை சென்றடையும். மதுரையில் இருந்து 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் (06154) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடையும். இதேபோல், தாம்பரத்தில் இருந்து 16-ந்தேதி இரவு 9.40 மணிக்கு சிறப்பு ரெயில் (06157) புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு மதுரையை சென்றடையும்.
Advertisement
மதுரையில் இருந்து 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06158), மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தை அடையும். மேலும், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து 16-ந்தேதி காலை 10.45 மணிக்கு பயணிகள் ரெயில் (06161) புறப்பட்டு, அன்றிரவு 11.30 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு பயணிகள் ரெயில் (06162) புறப்படும். இந்த ரெயில் அன்றிரவு 11.45 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தை வந்தடையும். இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.