மாணவர்களின் கல்வி மற்றும் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி, அதன் பயன்களை அதிகளவிலான மாணவர்களுக்கு கொண்டு சேர்க்க தமிழக முதல்-அமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் கல்விக் கனவை தலைமுறைகள் கடந்தும் முன்னெடுக்கும் வகையில், மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்கள் கல்வியில் முழுமையான கவனம் செலுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் வாயிலாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான, தரமான காலை உணவு வழங்கப்படுகிறது. குறிப்பாக, காலையில் உணவு உட்கொள்ளாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியை போக்கி, அவர்கள் வகுப்பறையில் கவனத்துடன் பாடங்களை கற்கும் சூழலை உருவாக்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
Advertisement
கல்வியுடன் ஊட்டச்சத்தையும் இணைத்து, மாணவர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டம், அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க பயனை அளிப்பதுடன், பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியோடு ஊட்டச்சத்தையும் வழங்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பையும் வலுப்படுத்துகிறது. காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்வின்போது, பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சுகாதாரம், வகுப்பறை உள்ளிட்ட தேவைகள் குறித்தும் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கேட்டறிந்தார். மாணவர்களுக்கான கல்விச் சூழலை மேலும் மேம்படுத்த தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். கல்வி, ஊட்டச்சத்து மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்தத் திட்டம் மேலும் பல அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படுவது, மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமையும் என்றும் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.