Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

மவுனம் காக்கும் அஜித்... புதிய அரசியல் கட்சிகளை தொடங்கி வரும் ரசிகர்கள்

மவுனம் காக்கும் அஜித்... புதிய அரசியல் கட்சிகளை தொடங்கி வரும் ரசிகர்கள்

நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அஜித் ரசிகர்கள் சார்பில் புதிய கட்சி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலும் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. குன்றத்தூரில் அஜித் ரசிகர்கள் இணைந்து ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் கட்சியை உருவாக்கியுள்ளனர். இதற்கான முதல் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்றனர். கூட்டம் நடைபெற்ற இடத்தில்,‘நாளைய முதல்வரே பதவியேற்க வா’** உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், நடிகர் அஜித்தின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, ‘நாளைய முதல்வர் அஜித்’ என முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து கட்சியின் தலைவர் பாபு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் சின்னமாக கார் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சித் தலைவர் பாபு, 2031-ம் ஆண்டு அஜித்தை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் நலனுக்காக மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் ஊராட்சிகள் வாரியாக பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Advertisement
அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதேபோல், சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயும் அஜித் ரசிகர்கள் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி, அதன் கொடியை அறிமுகப்படுத்தினர். ரசிகர்கள் தொடர்ந்து இதுபோன்று அரசியல் கட்சிகளை தொடங்கி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், திரைப்படங்களில் நடிப்பதுடன் அவ்வப்போது கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை என்றும் அவர் பலமுறை பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இருப்பினும், அஜித்தின் அரசியல் வருகை குறித்த விவாதங்கள் அவ்வப்போது தமிழகத்தில் எழுந்து வருகின்றன. ரசிகர்கள் புதிய கட்சிகளை உருவாக்கி வரும் நிலையிலும், அஜித் இதுவரை அரசியல் தொடர்பான எந்தக் கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அஜித் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அஜித் தொடர்ந்து மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு