Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 22 அக்டோபர் 2026 | 5 ஐப்பசி பராபவ வருடம்

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த “துளி” இலச்சினையைத் திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த “துளி” இலச்சினையைத் திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தில் மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “துளி” என்ற இலச்சினையைத் திறந்து வைத்த முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தலைமையகத்தில் இன்று (அக். 21) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் விஜய், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வுக்கான “துளி” இலச்சினையைத் திறந்து வைத்ததுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்லத்தையும் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, மழைநீர் சேமிப்பு தொடர்பான குறும்படத்தையும் அவர் பார்வையிட்டார்.

மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றத் திட்டம் குடிநீர், விவசாயம், தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கு நீர் முக்கியமான இயற்கை வளமாக உள்ளது. அதேவேளையில், நீரின் தேவை அதிகரிப்பு, நகரமயமாக்கல், மழைப்பொழிவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதும் நிலத்தடி நீர்வளங்களைப் பாதுகாப்பதும் அவசியமாகியுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைப் புதுப்பித்தல், புதிய அமைப்புகளை உருவாக்குதல், நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாத்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகியவை இம்முயற்சியின் முக்கிய நோக்கங்களாகும். இதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகள் மற்றும் பிற கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஆய்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே உள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பொதுக் கட்டடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிகக் கட்டடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஆய்வு செய்யப்படும். குறிப்பாக, மேற்கூரைகள், நீர்வழிப் பாதைகள், வடிகட்டும் அறைகள், நிலத்தடி நீரைச் செறிவூட்டும் குழிகள் மற்றும் கிணறுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் தொடர்புடைய அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டட அனுமதி விதிகளில் இடம்பெற்றுள்ள மழைநீர் சேமிப்பு தொடர்பான நிபந்தனைகள் முறையாகச் செயல்படுத்தப்படும். புதிய கட்டடங்களில் மட்டுமின்றி, ஏற்கெனவே உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த ஊக்கமளிக்கப்படும். மேலும், நிலத்தின் தன்மை, நிலத்தடி அமைப்பு மற்றும் நீரியல் சூழலுக்கு ஏற்ற வகையில் மழைநீரை நிலத்துக்குள் செலுத்தும் அகழிகள், நீர் ஊடுருவும் குழிகள், செறிவூட்டும் கிணறுகள், வண்டல் தடுப்புகள் மற்றும் வடிகட்டும் அமைப்புகள் போன்றவை உருவாக்கப்படும்.

அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் அரசுத் துறைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் தங்களது வளாகங்களில் மழைநீரைச் சேகரித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டுவருவதுடன், நிலத்தடி நீர்வளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமுள்ள இடங்களில், புதிதாகச் செயல்படுத்தப்படும் நகர்ப்புற மற்றும் ஊரகக் குடிநீர் வழங்கல் திட்டங்களிலும் மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் இணைக்கப்படும். மழைநீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காக, அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும்.

Advertisement

பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மழைநீர் சேமிப்பு தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சுயஉதவிக் குழுவினர், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மற்றும் சமூகத் தன்னார்வலர்களுக்குப் பயிற்சிகளும் செயல்விளக்க நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். ஒவ்வொரு வீடு மற்றும் நிறுவனத்திலும் மழைநீரை அந்தந்த இடத்திலேயே சேகரித்துப் பயன்படுத்துவதுடன், சேகரிப்பு அமைப்புகளைத் தொடர்ந்து பராமரிக்கவும் பொதுமக்களும் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படுவர். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கெனவே உள்ள கட்டமைப்புகள், புதுப்பிக்கப்பட்ட மற்றும் பழுதுபார்க்கப்பட்ட அமைப்புகள், புதிதாக உருவாக்கப்பட்ட வசதிகள், மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பணிகள் ஆகியவை குறித்த பதிவுகளைப் பராமரிக்க வேண்டும். சாத்தியமுள்ள இடங்களில், பணிகளின் முன்னேற்றம் தொடர்பான புகைப்படங்கள், புவியிடக் குறியீடுகள் மற்றும் இணையவழி அறிக்கைகள் மூலமாகவும் ஆவணப்படுத்தப்படும்.

சிறப்பாகச் செயல்படுவோருக்கு விருதுகள் மழைநீர் சேமிப்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்கள், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு அங்கீகாரமும் விருதுகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற நீர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தற்போதைய திட்டங்களோடு இந்த இயக்கமும் ஒருங்கிணைக்கப்படும். இதன்மூலம் கிடைக்கக்கூடிய வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதுடன், ஒரே பணியை மீண்டும் மீண்டும் செய்வதும் தவிர்க்கப்படும். இந்த இயக்கத்தை முன்னெடுப்பதற்கான முதன்மைத் துறையாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயல்படும். சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், நிறுவனங்கள் தங்களது வளாகங்களிலும் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும். மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதன் மூலம் நீர்வளத்தைப் பாதுகாக்கவும், அரசின் மழைநீர் சேமிப்பு முயற்சிகளுக்குப் பங்களிக்கவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா. குமார், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பல்வேறு அரசுத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு