Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு; பிரிஜ் பூஷணுக்கு டெல்லி கோர்ட்டு நோட்டீஸ்

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு; பிரிஜ் பூஷணுக்கு டெல்லி கோர்ட்டு நோட்டீஸ்

மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் பா.ஜ.க. எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு டெல்லி கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக 12 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கங்கள் வென்ற வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில கால இடைவெளிக்குப் பிறகு அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்தது. அவர்களுக்கு ஆதரவாக சம்யுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்களும் குரல் கொடுத்தனர். அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354, 354டி, 345ஏ மற்றும் 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, ரோஸ் அவென்யூ கோர்ட்டில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.

Advertisement
இதற்கிடையே, பிரிஜ் பூஷணை மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும் என வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 6 வீராங்கனைகள் அவருக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு நீதிபதி அஸ்வினி பன்வார், பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து கடந்த ஆகஸ்டு 3-ந்தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும், தாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் தொடர்ந்து போராடுவோம் என்றும் வினேஷ் போகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர் மற்றும் வினோத் தோமர் பதிலளிக்க வேண்டும் என டெல்லி கோர்ட்டு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி திக் வினய் சிங் விசாரித்து, அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு