தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல் அமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 107 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினமும் 100 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
Advertisement
இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல் அமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து விஜய் கை அசைத்தபடி சென்றார். விஜய்யின் வருகையையொட்டி விமான நிலையம் முதல் மருத்துவமனை வரையிலான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக ரோடு ஷோவாக விஜய் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.