மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி முறைகேடு: தி.மு.க. நிர்வாகியின் கணவர் கைது
மதுரை மாநகராட்சியில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு வரி நிர்ணயத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் மண்டலத் தலைவரின் கணவர் சரவணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள் உள்ளிட்ட சுமார் 2,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 2022 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த முறைகேடு குறித்து ஆய்வு செய்தபோது, மாநகராட்சி அதிகாரிகளின் கடவுச்சொற்களைத் தவறாகப் பயன்படுத்தி வரி தொடர்பான பதிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தி.மு.க.வைச் சேர்ந்த மேயர் இந்திராணி, 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த முறைகேடு தொடர்பாக அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவில் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வழக்கில் முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், வரிவிதிப்புக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட உதவி கமிஷனர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என சுமார் 25 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.