Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

மதுரை நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம், வைரங்கள் கொள்ளை: விசாரணையில் வெளியான புதிய திருப்பம்

மதுரை நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம், வைரங்கள் கொள்ளை: விசாரணையில் வெளியான புதிய திருப்பம்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பல்வேறு பகுதிகளில் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கடை திறக்கப்பட்டது. மூன்று தளங்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் தரைத்தளம் வாகன நிறுத்துமிடமாகவும், முதல் தளம் தங்க நகைகள் விற்பனைப் பிரிவாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளத்தில் வைர நகைகளுக்கான விற்பனைப் பிரிவும், மூன்றாவது தளத்தில் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கான விற்பனைப் பிரிவும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், கடையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாகன நிறுத்துமிடத்திலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதற்காகக் கடையின் பின்புறத்தில் இரும்புக் கம்பிகளைக் கொண்டு சாரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று காலை சுமார் 9.30 மணிக்கு ஊழியர்கள் கடையைத் திறக்க வந்தனர். அப்போது முதல் தளத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். நகைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பெட்டிகள் திறக்கப்பட்டு, காலியாக ஆங்காங்கே கிடந்தன. இதையடுத்து ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட ஆய்வில், சுமார் 15 கிலோ தங்க நகைகளும் ஏராளமான வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.21 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து பல்வேறு தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சிசிடிவி காட்சிகளில் சிக்கிய கொள்ளையன் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை சம்பவம் தொடர்பான முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு உடல் முழுவதும் கருப்பு நிறத் துணியால் மறைத்துக்கொண்டு, முகமூடி மற்றும் கையுறைகள் அணிந்த ஒருவர் கடைக்குள் நுழைந்துள்ளார். கட்டிடத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரத்தைப் பயன்படுத்தி மொட்டை மாடிக்குச் சென்ற அவர், அங்கிருந்து லிப்ட் அமைக்கும் பணிக்காகப் பொருத்தப்பட்டிருந்த கயிற்றின் உதவியுடன் லிப்ட் செல்லும் பாதை வழியாக முதல் தளத்தை அடைந்துள்ளார்.

Advertisement
அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பெரிய பையில் சேகரித்துள்ளார். பின்னர், பதற்றமின்றி அங்கிருந்து வெளியேறிய அவர், ஜன்னலில் இருந்த இரும்புக் கதவை உடைத்து அதன் வழியாகத் தப்பிச் சென்றது சிசிடிவி பதிவுகளில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையன் முகத்தை முழுமையாக மறைத்திருந்ததால் அவரது அடையாளத்தைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சிசிடிவி காட்சிகளில் பதிவான உடல் அமைப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மூலம் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை கொள்ளை நடந்த நகைக்கடை மதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், குற்றத்தில் ஈடுபட்ட நபர் ரயில் மூலம் கேரளா அல்லது வடமாநிலங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து பல்வேறு ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகைக்கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு வேலை செய்த தொழிலாளர்களுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. குறிப்பாக, கடையின் கட்டுமானம் மற்றும் அலமாரிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்களின் பின்னணி குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பணிகளுக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், புதிதாகத் திறக்கப்பட்ட இந்த ஷோரூமில் பணியாற்றிய 25 ஊழியர்களிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடையில் சுமார் 80 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றில் பதிவான அனைத்து காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளையனின் முகம் ஏதேனும் ஒரு கேமராவில் பதிவாகியுள்ளதா என்பதையும் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த வாரமே கொள்ளை முயற்சி? இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு முக்கியத் திருப்பமாக, முகமூடி அணிந்த நபர் கடந்த வாரமே நகைக்கடையில் கொள்ளையடிக்க முயன்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறையாக வந்து நகைகளைத் திருடிச் சென்றிருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் ஒரு நபரின் உருவம் மட்டுமே பதிவாகியிருந்தாலும், இந்தக் கொள்ளையில் இரண்டு அல்லது மூன்று பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு