மதுரை காளவாசல் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புறவழிச்சாலையில் உள்ள காளவாசல் பகுதியில் நாட்டின் முன்னணி நகை நிறுவனத்துக்குச் சொந்தமான தனிஷ்க் கடை செயல்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் இந்தக் கடை, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. இருப்பினும், கடையின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் அங்கேயே தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடை பூட்டப்பட்டது. இன்று காலை ஊழியர்கள் கடையைத் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடையின் பிரதான நுழைவுவாயில் வழியாக வராமல், பின்புறம் உள்ள மாடி வழியாக உள்ளே நுழைந்து அவர்கள் நகைகளைத் திருடிச் சென்றிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Advertisement
இந்தச் சம்பவம் தொடர்பாக நகைக்கடை நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.50 கோடி என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரை எஸ்.எஸ். காலனி காவல்துறையினர், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும், கட்டுமானப் பணிக்காக அங்கு தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களின் பின்னணி குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, தடய அறிவியல் நிபுணர்கள் கடைக்கு நேரில் வந்து தடயங்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர். மதுரையின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.