மதுரையில் கல்குவாரி, கிரஷர் மற்றும் எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் ஆட்சியரிடம் மனு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை மாவட்ட கல்குவாரி, கிரஷர் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், தற்போது செயல்பட்டு வரும் புதிய அரசின் நிர்வாகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டு, இதன் மூலம் பொருளாதாரச் செலவுகள் குறைந்துள்ளதாகவும், இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் சுமார் 50 கல்குவாரிகளும், 70 கிரஷர்களும் செயல்பட்டு வருவதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது நடைச்சீட்டு மற்றும் டிரான்சிட் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இந்தப் பிரச்சினையை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், கடந்த 28.05.2026 அன்று கள்ளிக்குடி தாலுகா கல்லணை கிராமத்தில் செயல்பட்டு வந்த குவாரிகள், திருப்பரங்குன்றம் தாலுகாவில் செயல்பட்ட ஒரு குவாரி மற்றும் வாடிப்பட்டி தாலுகா பாலமேடு சத்திர வெள்ளாளப்பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாரிகள் ஆகியவற்றை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் நடத்தி வரும் நிலையில், குவாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.