மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு புதிய வளர்ச்சித் திட்டங்கள்: முதல்வர் விஜய் அறிவிப்பு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அப்பகுதிகளின் வளர்ச்சியை முன்னெடுக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட சத்தியபாமாவும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, இரு தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றவும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ளமுக்கிய அறிவிப்புகள் வருமாறு: மதுராந்தகம் தொகுதிக்கான திட்டங்கள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீர்வளம் மற்றும் விவசாயம் - அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ரூ.5 கோடி செலவில் தடுப்பணை கட்டப்படும். - செம்பூண்டி ஊராட்சியில் பொதுப்பணித்துறை ஏரியின் மதகுகள் ரூ.4.50 கோடியில் சீரமைக்கப்படும். - நெல்வாய் ஊராட்சியில் மடுவைத் தூர்வாரி, கரைகளை வலுப்படுத்த ரூ.1.30 கோடி ஒதுக்கப்படும். - மதுராந்தகம் தொகுதியில் தலா ரூ.30 லட்சம் செலவில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள், மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்படும். - ஆத்தூரில் 20,000 மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வசதியுடன், ரூ.20 கோடியில் பகுதியளவு மூடப்பட்ட கிடங்கு (Semi Covered Warehouse) கட்டப்படும். - 25 ஏக்கர் நிலத்தில் ரூ.10 கோடி செலவில் மாநில விதைப் பண்ணை உருவாக்கப்படும். - பாலாற்றில் படாளம் - உதயம்பாக்கம் இடையே புதிய உயர்மட்ட தடுப்பணை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். - 1984-ல் அமைக்கப்பட்ட 30 கி.மீ. நீள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாய் தூர்வாரப்பட்டு, அதன் கட்டமைப்புகள் சீரமைக்கப்படும். இதன்மூலம் 30 ஏரிகளுக்கு நீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மற்றும் சமூக வசதிகள் - அச்சரப்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். - புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். - தின்னலூர் ஊராட்சியில் ரூ.70 லட்சம் செலவில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்படும். - கருங்குழியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கிராமப்புற மாணவர்களுக்கான சிறிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். நகர்ப்புற மேம்பாடு மற்றும் மின்சார வசதிகள் - மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்படும். - மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்காக புதிய தங்கும் விடுதி கட்டப்படும். - படித்த இளைஞர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியில் அறிவுசார் மையம் உருவாக்கப்படும். - பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.4 கோடியில் வாரச்சந்தை அமைக்கப்படும். நகரில் புதிய மழைநீர் வடிகால் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.