தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் ஆயிரக்கணக்கான சாளை மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களைச் சேகரித்துச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே அமைந்துள்ள மணப்பாடு பகுதியில் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் பிடிக்கப்படும் சாளை மீன்களுக்கு நல்ல சுவை இருப்பதால், அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகள் மத்தியில் எப்போதும் போட்டி நிலவுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மணப்பாடு மணல் குன்றில் அமைந்துள்ள சவேரியார் வாழ்ந்த குகைக்கு வடக்குப் பகுதியில், சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரையோரமாக ஏராளமான சாளை மீன்கள் உயிருடன் ஒதுங்கின.
Advertisement
ஆயிரக்கணக்கான மீன்கள் ஒரே நேரத்தில் கரை சேர்ந்ததைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் நாட்டுப்படகுகளில் அங்கு சென்று கூடைகளில் மீன்களைச் சேகரித்தனர். அதேபோல், கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளில் மீன்களை ஆர்வத்துடன் அள்ளிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மணப்பாடு கடல் பகுதியில் நீரோட்டத்தின் காரணமாக அதிக அளவில் மணல் திட்டுகள் உருவாகின்றன. கடலில் கூட்டமாகச் சென்ற சாளை மீன்கள், நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் கரைக்கு அடித்து வரப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர். மேலும், மணப்பாடு கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்ட மாற்றங்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை அதிகாரிகளும் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.