மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான ரமாபாய். இளம் வயதிலேயே கணவரை இழந்த இவர், வீடுகளில் சமையல் வேலை செய்து தனது இரு மகள்களையும் தனியாக வளர்த்து வருகிறார். அவர்களில் ஒருவர் போலீஸ் பணிக்கான தேர்வுக்கு தயாராகி வருகிறார். மற்றொரு மகள் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.மகளின் கல்விச் செலவுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில், பல்வேறு வழிகளில் முயன்றும் ரமாபாயால் தேவையான தொகையை திரட்ட முடியவில்லை. அப்போது, தனது வீட்டுக்கு அருகில் உள்ள கல்வி நிறுவனத்தில் மாரத்தான் போட்டி நடைபெற இருப்பதையும், அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருப்பதையும் அவர் அறிந்தார். இதையடுத்து, மகளின் படிப்புக்காக அந்தப் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார்.போட்டி நடைபெற்ற நாளில் தடகள வீரர்களும், இளைஞர்களும் விளையாட்டு உடைகள் மற்றும் காலணிகளுடன் தயாராக இருந்தனர். அந்த நேரத்தில், வழக்கமாக அணியும் சேலையுடன் ரமாபாய் போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்தார். முதலில், அவர் தனது மகளை அழைத்து வர வந்திருப்பதாகவே அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால், அவர் போட்டியாளர்களுடன் சேர்ந்து மாரத்தானில் பங்கேற்க வந்தது பின்னர்தான் தெரியவந்தது.போட்டி தொடங்கியதும் மற்றவர்கள் வேகமாக ஓடத் தொடங்கினர்.
Advertisement
ரமாபாய் தனது இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடினார். பாதி தூரத்தை கடந்தபோது அவர் அணிந்திருந்த ரப்பர் செருப்பு அறுந்துவிட்டது. இருப்பினும், வெற்றி பெற வேண்டும் என்ற அவரது முயற்சி குறையவில்லை.அறுந்த செருப்புகளை கையில் எடுத்துக்கொண்டு, பின்னர் வெறுங்காலுடன் அவர் தொடர்ந்து ஓடினார். சேலை அணிந்தபடி, கரடுமுரடான சாலையில் காலணி இல்லாமல் மகளின் கல்விக்காக அவர் ஓடிய காட்சி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.இறுதியில் பந்தய இலக்கை முதலில் அடைந்து ரமாபாய் வெற்றி பெற்றார். அவருக்கு சான்றிதழுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. அவர் பரிசு பெற்றபோது அங்கிருந்தவர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி பாராட்டினர்.ஆனால், ரமாபாய் எந்த ஆரவாரமும் இல்லாமல் சிறிய புன்னகையுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். குடும்பத்துக்காக தினமும் உழைத்து ஓடிக்கொண்டிருக்கும் தனக்கு இந்த மாரத்தான் ஓட்டம் பெரிய விஷயமல்ல என்பதுபோல் அவரது அணுகுமுறை இருந்தது.மகளின் கல்விச் செலவுக்காக வெறுங்காலுடன் ரமாபாய் மாரத்தானில் ஓடிய காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.