இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையில் முக்கிய இடம்பிடித்துள்ள யு.பி.ஐ. (UPI), தனது 10-வது ஆண்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யு.பி.ஐ. வாயிலாக ரூ.29.82 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. மேலும், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,451 கோடியை எட்டி வரலாற்றிலேயே புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (NPCI), ரிசர்வ் வங்கியுடன் இணைந்து 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந்தேதி நாடு முழுவதும் யு.பி.ஐ. சேவையை அறிமுகப்படுத்தியது. தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மக்களிடையே பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தளமாக யு.பி.ஐ. வளர்ச்சி பெற்றுள்ளது.டீக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை பல்வேறு இடங்களில் யு.பி.ஐ. பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவைத் தாண்டி பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 11 நாடுகளிலும் இந்த சேவை பயன்பாட்டில் உள்ளது.இதன் காரணமாக யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், அவற்றின் மொத்த மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
Advertisement
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான யு.பி.ஐ. பரிவர்த்தனை குறித்த தரவுகளை NPCI வெளியிட்டுள்ளது.அதன்படி, ஆகஸ்டில் யு.பி.ஐ. மூலம் ரூ.29.82 லட்சம் கோடி மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த மதிப்பு ரூ.24.85 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது சுமார் 20 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு மே மற்றும் ஜூலை மாதங்களில் யு.பி.ஐ. பரிவர்த்தனை மதிப்பு ரூ.29.9 லட்சம் கோடியாக இருந்தது.பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதத்தில் 2,451 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது 22 சதவீத வளர்ச்சியுடன் புதிய வரலாற்று உச்சமாக அமைந்துள்ளது. ஜூலை மாதத்தில் 2,366 கோடி பரிவர்த்தனைகளும், ஜூன் மாதத்தில் 2,272 கோடியும், மே மாதத்தில் 2,320 கோடியும் பதிவாகியிருந்தது. 10 ஆண்டுகளில் யு.பி.ஐ. பெற்றுள்ள இந்த வளர்ச்சி, இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.