‘மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை’ - அன்புமணி ராமதாஸ்
மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு சட்டப்பூர்வ உரிமையோ, தார்மீக அடிப்படையிலான தகுதியோ கிடையாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவது கர்நாடகத்தின் உரிமை என்றும், அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதால் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலத்திடமும் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். ஆனால், காவிரியின் கடைமடை பாசனப் பகுதியாக உள்ள தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணை கட்டக்கூடாது என்பதை நீதிமன்ற உத்தரவுகள் தெளிவுபடுத்துகின்றன. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்காத அனுமதியை வழங்கியதாகக் கூறி தேவையற்ற பதற்றத்தை உருவாக்க கர்நாடக அரசு முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே டி.கே.சிவக்குமார் இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவரது விளக்கங்கள் உண்மைக்கு மாறானவை மட்டுமல்லாமல், விவகாரத்தின் உண்மையான நிலையை திசைதிருப்புவதுடன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் தவறாகச் சித்தரிக்கின்றன. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நேரடியாக எந்த அனுமதியும் வழங்கவில்லை. அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில் கடந்த மே 21-ஆம் தேதியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையமே முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவில் தமிழக அரசுக்கு ஆட்சேபனை இருந்தால், உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்பதே நீதிமன்றத்தின் நிலைப்பாடு. காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதற்கு முன்பாக தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்க வேண்டியதில்லை என்பதைத்தான் தீர்ப்பு குறிப்பிடுகிறது. இந்த விவரம் கர்நாடக துணை முதல்வருக்கும் நன்கு தெரியும். இருப்பினும், அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு அவர் நீதிமன்றத் தீர்ப்பைத் தவறாக எடுத்துரைக்கிறார். மேலும், மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு இயல்பான உரிமை எதுவும் இல்லை. உலகளவில் பின்பற்றப்படும் நீர்ப்பாசன நடைமுறைகளின்படி, கடைமடைப் பகுதிகளின் நீர்வரத்தைப் பாதிக்கும் வகையிலான திட்டங்களை மேல்பகுதியில் உள்ள மாநிலங்கள் தன்னிச்சையாகச் செயல்படுத்த முடியாது. சர்வதேச ஒப்பந்தங்களிலும் இந்தக் கொள்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் இடம்பெற்றுள்ள விதிகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்பது 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியான காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும், 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.