தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்தச் சூழலில், சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறைச் செயலாளர் கார்த்திக், டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.
Advertisement
சங்கர், சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, தமிழக காவல்துறையில் போதிய பணியாளர்கள் இல்லாத நிலை இருப்பதாக அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அனைத்து மாவட்டங்களிலும் காவலர்கள் கூடுதல் பணிச்சுமையுடன் பணியாற்றி வருவதாகவும், காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில், புதிதாக காவலர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதப்படையில் பணியமர்த்துவதற்கு ஓராண்டுக்கும் மேலாகும் எனக் கூறப்படுகிறது. எனவே, தற்போதைய சூழலில் சட்டம் - ஒழுங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் வகையில், போலீஸ் நண்பர்கள் குழுவை மீண்டும் உருவாக்குவது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளார்.