பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூரில், பேக்கரி கடையை மரக்கட்டையால் தாக்கி சேதப்படுத்திய நபர் தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கீழப்புலியூரில் செயல்பட்டு வரும் பேக்கரி கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அவர் ஒரு குறிப்பிட்ட நபரிடம் கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருந்த சுமார் ரூ.78,000 ரொக்கப் பணத்தைத் தவறுதலாக அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். பின்னர் கடையைச் சுத்தம் செய்தபோது பணத்தைக் கண்டெடுத்த பேக்கரி உரிமையாளர், அதைத் தனது வசம் வைத்துக்கொள்ளாமல் குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதற்கிடையே, அந்தப் பணத்தைப் பெற வேண்டிய நபருக்கு, போலீசாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டதால் உடனடியாக அதைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த அவர், பணத்தை ஏன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தீர்கள் எனக் கேட்டு பேக்கரி உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பெரிய மரக்கட்டையை எடுத்துவந்த அந்த நபர், பேக்கரியின் கண்ணாடிக் கதவுகள் மற்றும் பொருட்களைக் காட்சிப்படுத்தும் கவுண்ட்டர்களைச் சரமாரியாகத் தாக்கி உடைத்துள்ளார். அப்போது கடைக்குள் இருந்த பெண் ஒருவர் அச்சத்தில் அலறியதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பேக்கரி கடை தாக்கப்பட்ட சம்பவம் கீழப்புலியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.