பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 சவரன் நகை திருட்டு: ஆட்டோ ஓட்டுநர் கைது
தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 17 சவரன் தங்க நகைகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.குடியிருப்பில் வசிக்கும் ராஜா சீனிவாசனின் மனைவி உமாதேவி (61), கடந்த ஜூலை 22-ஆம் தேதி குடும்பத்தினருடன் சுந்தரவேல்புரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்கதவும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். தொடர்ந்து பீரோவில் வைத்திருந்த 17 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து உமாதேவி அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அண்ணாநகரைச் சேர்ந்த நாராயணனின் மகன் சீமான் (38) இந்த திருட்டில் தொடர்புடையவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரான சீமானை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனது இரு நண்பர்களின் உதவியுடன் திருடப்பட்ட நகைகளை வங்கியில் அடகு வைத்திருப்பதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.பின்னர், கைது செய்யப்பட்ட சீமானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் உடந்தையாக இருந்து தற்போது தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.