புதுவையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா, ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 29-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது.இதையொட்டி வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பக்தர்கள் கடலூர் வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரியில் இருந்து நேற்று காலை வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.மாலை 5 மணியளவில் கடலூருக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த 27 ஆண்டுகளாக சென்னையில் இருந்து வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று வருவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு தனக்கும் தமிழகத்துக்கும் சிறப்பான நிகழ்வுகள் நடந்துள்ளதால், வேளாங்கண்ணி மாதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து 28-வது ஆண்டாக பாதயாத்திரை செல்வதாக கூறினார்.தற்போது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால், இந்த ஆண்டு சென்னைக்கு பதிலாக புதுச்சேரியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.மேலும், முன்பு சாதாரண மனிதராக இருந்த நிலையில், தற்போது அமைச்சராக இருப்பதால் பாதயாத்திரையின் போது ஒவ்வொரு மாவட்டத்தையும் கடக்கும்போதும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி வருவதாக கூறினார்.
அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கழிவறை வசதி, முதலுதவி சிகிச்சை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சிறப்பாக ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மரிய வில்சன் கூறினார்.