புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், ஆவணப்படம் திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மாணவர் அமைப்புகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன், அம்பேத்கர் மாணவர் இயக்கம் சார்பில் நேற்று இரவு உமர் காலித் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. அப்போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, எஸ்.எப்.ஐ. மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக்காக அங்கு இருந்தனர். ஆவணப்படம் நிறைவடைந்த பின்னர், அது தொடர்பாக மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏபிவிபி மாணவர்களுக்கும், பிற மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement
நிலைமை தீவிரமடைந்த நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தள்ளியதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் தலையிட்டு, மாணவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மோதலில் காயமடைந்த சில மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.