தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா இன்று காலமானார். அவருக்கு வயது 76. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா இன்று காலை அனுமதிக்கப்பட்டார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சையின்போது அவரது உயிர் பிரிந்தது. தேவாவின் மறைவுச் செய்தி திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இசைப் பாணியை உருவாக்கிய தேவா, ஏராளமான கானா பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார்.
Advertisement
1989-ம் ஆண்டு வெளியான ‘மனசுக்கேத்த மகராசா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து, 1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் அவரை மக்களிடையே பரவலாகப் பிரபலப்படுத்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது இசையாலும் பாடல்களாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த தேவாவின் மறைவு, திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது.