பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்குமா 'ஜனநாயகன்'?.. 'கூலி' வசூல் சாதனையை மிஞ்சுமா என்ற எதிர்பார்ப்பு
தமிழக முதல்-அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள இறுதி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், இந்த ஆண்டின் முக்கியமான தமிழ் திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சைபர் கிரைம் போலீசார் இதுவரை 11-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். எனினும், இத்தகைய கசிவுகள் திரையரங்கு வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ரசிகர்கள் நேரடியாக திரையரங்குகளில் படம் பார்க்கவே அதிக விருப்பம் காட்டுவார்கள் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள ‘ஜனநாயகன்’, ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுமார் 183 நிமிடங்கள் நீளமுடைய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், உலகம் முழுவதும் 3,500-க்கும் அதிகமான திரையரங்குகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பல இடங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை முன்பதிவின் மூலம் ரூ.10 கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டிலேயே ரூ.3.86 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், முதல் நாள் வசூலில் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் பெற்ற ரூ.151 கோடி வசூல் சாதனையையும், விஜய்யின் முந்தைய படம் ‘லியோ’ பெற்ற ரூ.149 கோடி வசூலையும் ‘ஜனநாயகன்’ முந்துமா என்ற கேள்வி திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது. வெளியீட்டு நாள் நெருங்குவதால் டிக்கெட் முன்பதிவு மேலும் வேகமெடுக்கும் என திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.