பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.98 கோடி
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்கும் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.3 கோடியே 98 லட்சத்து 27 ஆயிரத்து 230 காணிக்கையாக கிடைத்துள்ளது.பழனி முருகன் கோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக திகழ்கிறது. இக்கோவிலில் கடந்த 21-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் பொறுப்பு வெங்கடேஷ் தலைமையில் இந்தப் பணி நடைபெற்றது.முதல் நிலை கணக்கு அலுவலர் குருநாதன், மேலாளர் உமா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கைகள் கார்த்திகை மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டன.இதில் ரூ.3 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரத்து 714 ரொக்கம், 635 கிராம் தங்கம், 9,155 கிராம் வெள்ளி மற்றும் 918 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்தன.இதேபோல் திருஆவினன்குடி கோவில் உண்டியல் காணிக்கையில் ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 801 ரொக்கம், 24,320 கிராம் தங்கம் மற்றும் 478.300 கிராம் வெள்ளி கிடைத்தது.மேலும், மீனாட்சி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.29 ஆயிரத்து 715 காணிக்கையாக கிடைத்தது. இதையடுத்து மூன்று கோவில்களின் உண்டியல் காணிக்கையாக மொத்தம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 27 ஆயிரத்து 230 கிடைத்துள்ளது.