மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்துவது என ஏற்கனவே முடிவு செய்திருந்தன. ஆனால், தற்போது வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. அ.தி.மு.க.வில் நிலவும் சூழ்நிலை காரணமாகவே சிலர் ராஜினாமா செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்துக்காக தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினால் அதை யார் ஏற்றுக்கொள்வார்கள்? தங்களுக்கு ஆதரவளித்த மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவில் அவர்கள் ராஜினாமா செய்ததில் எந்த தவறும் இல்லை. அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி, தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவளித்து வருகிறார். அவர் தி.மு.க.வுடன் இணைந்து செல்லும் முடிவை எடுத்திருக்காவிட்டால், யாரும் ராஜினாமா செய்திருக்கமாட்டார்கள்.
Advertisement
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் விவகாரத்தில் எனக்கு எந்த தலையீடும் இல்லை. கோவில் குடமுழுக்கு நிகழ்வில் பி.டி.ஆர். குடும்பம் புறக்கணிக்கப்படவில்லை. பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணியை நாங்கள் உரிய முறையில் கவனித்துக்கொண்டோம். கோவிலை கட்டிய பாண்டிய மன்னரைவிட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதிகமாக பேசுகிறார். பி.டி.ஆர். டிரஸ்டுடன் தொடர்புடைய திருமண மண்டபத்தை பழனிவேல் தியாகராஜன் 3 ஆண்டுகளாக முடக்கி வைத்திருந்தார். அவர் முடக்கியிருந்த அந்த மண்டபத்தை மீண்டும் திறக்க நான் உதவியதால், என் மீது அவருக்கு தனிப்பட்ட ஈகோ ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் ஒரு குடும்பம் ரூ.30,000 கோடி ஊழல் செய்ததாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது. அவர் நிதியமைச்சராக இருந்தபோது, தி.மு.க. ஆட்சியில் ஏன் ஒதுக்கப்பட்டார்? அந்த ஆடியோ தொடர்பான பரிசோதனைக்கு அவர் தயாரா? இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.