: பள்ளி மதிப்பெண் அடிப்படையில் கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கை தொடர வேண்டும்: பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, பொது நுழைவுத் தேர்வு மூலம் அல்லாமல், மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அல்லது மாநில அரசுகள் நிர்ணயிக்கும் சேர்க்கை விதிமுறைகளின் அடிப்படையிலேயே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறையில் மாற்றம் தொடர்பான முக்கிய விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் சட்டம், 1984-ன் விதிகளின் அடிப்படையில், அனைத்து கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு முறையின் மூலம் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், 2026–27 கல்வியாண்டு முதல் தனி நுழைவுத் தேர்வு நடத்த முடியாத சூழலில், நீட் (NEET UG-2026) தரவரிசையை அடிப்படையாகக் கொண்டு சேர்க்கை நடத்துமாறு மாநிலங்களுக்கு இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியிருப்பது தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த முன்மொழிவு தமிழ்நாட்டுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், கால்நடை மருத்துவக் கல்வி என்பது ஒரு தொழில்முறை படிப்பு மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பு, கால்நடை ஆரோக்கியம், பால்வள மேம்பாடு மற்றும் கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய துறையாகும் என்றும் முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களே எதிர்காலத்தில் விவசாயிகளுக்கும் கிராமப்புறங்களுக்கும் சேவை செய்யும் கால்நடை மருத்துவர்களாக உருவாகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், இந்த நடைமுறை கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு உயர்கல்வியில் சம வாய்ப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக நீதி, பிராந்திய சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதில் இந்த முறை முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2007–08 கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்திருப்பதையும், நீட் போன்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கூடுதல் தடைகளை ஏற்படுத்துகின்றன என்ற நிலைப்பாட்டை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.