பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட காந்தியின் கடிதங்கள்... ரூ.16.2 கோடிக்கு ஏலம்
இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏலத்தில் விற்பனையானதில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய 688 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.16.20 கோடிக்கு ஏலம் போயுள்ளது.மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோராணிக்கு அவர் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார். ஆனந்த் டி. ஹிங்கோராணியின் மனைவி வித்யா உயிரிழந்த பின்னர், அவருக்கு ஆறுதல் மற்றும் மன உறுதியை அளிக்கும் வகையில் காந்தி எழுதிய கடிதங்களே பின்னர் நீண்ட கடிதப் பரிமாற்றமாக மாறின. இந்த தொடர்பு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தக் கடிதங்கள் தொகுக்கப்பட்டு ‘ஏ தாட் ஆப் த டே’ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டன.ஏல நிறுவனத்தின் தகவலின்படி, இந்தக் கடிதங்கள் காந்தியின் உண்மையான கையெழுத்துப் பிரதிகளாகும். அகிம்சை, பிரம்மச்சரியம், உடைமைகளைத் துறத்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை, ராமநாமம், சேவை, உழைப்பு, பசி, கடமை, சுயராஜ்யம், தார்மிக பொறுப்பு, மவுனம், மனசாட்சி, பற்றின்மை, சுய உணர்தல் மற்றும் இறைவனைத் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஹிங்கோராணி குடும்பத்தினரால் பல தலைமுறைகளாக பத்திரமாக பாதுகாக்கப்பட்ட இந்த ஆவணங்கள், உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பாகும்.