பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட காந்தியின் கடிதங்கள்... ரூ.16.2 கோடிக்கு ஏலம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட காந்தியின் கடிதங்கள்... ரூ.16.2 கோடிக்கு ஏலம்

பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட காந்தியின் கடிதங்கள்... ரூ.16.2 கோடிக்கு ஏலம்

இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஏலத்தில் விற்பனையானதில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய 688 கடிதங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.16.20 கோடிக்கு ஏலம் போயுள்ளது.மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோராணிக்கு அவர் பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளார். ஆனந்த் டி. ஹிங்கோராணியின் மனைவி வித்யா உயிரிழந்த பின்னர், அவருக்கு ஆறுதல் மற்றும் மன உறுதியை அளிக்கும் வகையில் காந்தி எழுதிய கடிதங்களே பின்னர் நீண்ட கடிதப் பரிமாற்றமாக மாறின. இந்த தொடர்பு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்தக் கடிதங்கள் தொகுக்கப்பட்டு ‘ஏ தாட் ஆப் த டே’ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டன.ஏல நிறுவனத்தின் தகவலின்படி, இந்தக் கடிதங்கள் காந்தியின் உண்மையான கையெழுத்துப் பிரதிகளாகும். அகிம்சை, பிரம்மச்சரியம், உடைமைகளைத் துறத்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை, ராமநாமம், சேவை, உழைப்பு, பசி, கடமை, சுயராஜ்யம், தார்மிக பொறுப்பு, மவுனம், மனசாட்சி, பற்றின்மை, சுய உணர்தல் மற்றும் இறைவனைத் தேடுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஹிங்கோராணி குடும்பத்தினரால் பல தலைமுறைகளாக பத்திரமாக பாதுகாக்கப்பட்ட இந்த ஆவணங்கள், உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பாகும். ‘சாப்ரானார்ட்’ நிறுவனம் நடத்திய ஏலத்தில் இந்த தொகுப்பு ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. இதன் மூலம் இந்திய வரலாற்று ஆவணங்களில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்ட ஆவணம் என்ற உலக சாதனையை இது பெற்றுள்ளது.இதுதவிர, மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய 86 தொகுப்புகளும் ஏலத்தில் இடம்பெற்றன.கடவுள் மற்றும் பகவத் கீதை தொடர்பான காந்தியின் கருத்துகளைக் கொண்ட கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கடிதங்கள் அடங்கிய ‘மெசேஜ் ஆன் காட்’ தொகுப்பு ரூ.1.68 கோடிக்கு விற்பனையானது.காந்தியின் ‘பெட்டி ராட்டை’ மற்றும் 2 கடிதங்கள் இடம்பெற்ற தொகுப்பு ரூ.1.02 கோடிக்கும், அவர் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்டு காந்தியின் கையொப்பம் இடம்பெற்ற புகைப்படம் ரூ.78 லட்சத்துக்கும் ஏலம் போனது.மேலும், பொருளாதார சுதந்திரம் குறித்து காந்தி எழுதிய கடிதங்கள், தந்தி செய்திகள் மற்றும் அஞ்சல் அட்டைகள் அடங்கிய தொகுப்பு ரூ.57.60 லட்சத்துக்கு விற்பனையானது.